'கைதி' படத்தின் வெற்றிக்குப்பிறகு, கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் 'தம்பி'. இந்தப் படத்தில், முதல்முறையாக அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார் கார்த்தி. 

தமிழில் 'பாபநாசம்' என்ற ஹிட் படத்தின் தடம்பதித்த பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் அடுத்த படைப்பாக இந்தப் படம் உருவாகியுள்ளது. 
குடும்ப உறவு, பாசம், காதல் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தம்பியாக கார்த்தியும், அக்காவாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். 

இவர்களுக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார். கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, '96' புகழ் கோவிந்த் வத்சவா இசையமைத்துள்ளார்.


சமீபத்தில், 'தம்பி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி சமூகவலைதளத்தில் அசத்தலான வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, தம்பி படக்குழுவின் அடுத்த சர்ப்ரைசாக படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. 

இந்த போஸ்டரை, நடிகர் கார்த்தியே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜோதிகா, கார்த்தி, சத்தியராஜ் ஆகிய மூவருக்கும் இடையே மெல்லிய பிளவு போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கிளாசான செகண்ட் லுக், சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. 

அத்துடன் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகிறது.முதல்முறையாக கார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் - தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கும் 2-வது படம் என எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'தம்பி' படம், டிசம்பர் வெளியீடாக திரைக்குவரவுள்ளது.