சொகுசு கார் வரி விலக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற நடிகர் விஜய்யின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீது நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு இன்று விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபராதம் விதித்து நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம் வழங்கிய தீர்ப்பின் நகல் இல்லாததால் விஜய்யின் வழக்கு பட்டியலிடப்படவில்லை. 

இந்நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி விஜய் தரப்பில் இருந்து கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வரி விவகாரத்தில் தீர்ப்பு நகலின்றி விசாரிக்க கோரிய நடிகர் விஜய்யின் மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்டனர். தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமலேயே வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.