லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது. 

தீபாவளி விருந்தாக டீசர் வெளியான சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களின் தலையில் கல் விழுந்தது போல் வந்தது ஒரு செய்தி. அதாவது மாஸ்டர் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கிவிட்டதாக ஒருபுறமும், இல்லவே இல்லை அமேசான் பிரைமிற்கு 7 மாசத்துக்கு முன்னாடியே வித்தாச்சு என்றும் வதந்திகள் வட்டமிட ஆரம்பித்தன. இதனால் ரசிகர்களை விட தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

இந்த சமயத்தில் தான் தயாரிப்பாளர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும். பிரபல ஒடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பொழுதும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காத்திருக்கிறோம். ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும்” எனக்கூறி அனைவரது வயிற்றிலும் பால் வார்த்தனர். 

அனேகமாக மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் மட்டும் 1000 தியேட்டர்களில் மாஸ்டர் படம் வெளியாக உள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்பை தர தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மற்றொருபுறம்  ‘மாஸ்டர்’ படத்திற்கு 500 முதல் 600 திரையரங்குகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ படம் வந்தால் போதும் என இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஆயிரம் தியேட்டர்களில் மாஸ்டர் ரிலீஸ் என்ற வதந்தி கூட இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.