படப்பிடிப்பில் ஃபோக்கஸ் லைட் அறுந்து விழுந்து அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் எலக்ட்ரிஷியனை நேரில் சென்று சந்தித்து அனைத்து உதவியையும் செய்துள்ளார் நடிகர் விஜய்.   

விஜய் நடிக்க, அட்லீ இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டது. 100 அடிக்கும் மேலான உயரத்தில் கிரேன் உதவியுடன் கட்டி வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் அறுந்து விழுந்த போது, கீழே நின்றுகொண்டிருந்த செல்வராஜ் என்பவரின் மீது அந்த லைட் விழுந்தது. 

அப்போது அவரை உடனடியாக அருகிலிருந்த ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். சன்ரைஸ் கால்ஷீட்டில் தொழிலாளர்கள் வேலை செய்வதால், மதியம் ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்குக்கூட செல்லாமல் நேரடியாக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு விரைந்தார் விஜய்.

செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த விஜய், மருத்துவர்களிடம் செல்வராஜின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அதன்பின், குடும்பத்தினரிடம் பேசியவர், ‘எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் என்று கூறியதுடன், அவரது பர்சனல் மொபைல் நம்பரையும் கொடுத்திருக்கிறார். 

அதன் பின், செல்வராஜின் தற்போதைய நிலை பற்றி டாக்டரிடம் கேட்டறிந்த விஜய், அவருக்கான சிகிச்சையை எந்தவொரு காலதாமதம்  இன்றி செய்யும்படி டாக்டரிடம் அறிவுறுத்தினார். அவருக்கு ஆகும் சிகிச்சைக்கான செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையை மேற்கொள்ளும்படியும் டாக்டரிடம் கூறியிருக்கிறார்.