ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்போடு  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் பிகில் திரைப்படம் வெளியிடப்பட்டது. விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லி இப்படத்தை இயக்கியுள்ளார். சிறப்பு காட்சிகள் தொடர்பாக இறுதிவரையிலும் நெருக்கடி இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியது. 

பெண்கள் கால்பந்து விளையாட்டு அணியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராயப்பன், மைக்கேல் மற்றும் பிகில் என மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கிறார். கபடியை முன்னிலைப்படுத்தி கில்லியில் நடித்ததுபோன்று பிகிலில் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக தளபதி விஜய் நடித்திருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் பெண்களின் சமூக முன்னேற்றம் குறித்தும் இந்த படம் பேசுவதாக சமூக ஊடங்களில் கருத்திட்டு வருகின்றனர்.

இயக்குனர் அட்லீ ஒவ்வொரு சீனையும் ஒரு டைரக்டராக மட்டும் எடுக்காமல் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராக எடுத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ராயப்பன் போன்ற கதாபாத்திரங்கள் இனி விஜயால் பண்ண இயலுமா என்று தெரியவில்லை என்றும், இன்னும் பத்து வருஷத்திற்கு ராயப்பன் கதாபாத்திரம் பேசுபொருளாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் படம் முடிந்து விட்டதென எழும்பி வெளியே போக இருந்தவர்களை, இயக்குனர் அட்லீ நின்று பார்க்க வைத்துவிட்டார் என்று பாராட்டி கொண்டிருக்கின்றனர் நடிகர் விஜயின் வெறித்தனமான ரசிகர் பட்டாளம்.

பிகில் படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பரவி வந்தாலும், அவற்றுக்கெல்லாம் விஜயின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து தங்கள் தளபதியின் படத்தை வழக்கம் போல தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.