விஜய் நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் தளபதி 64ஐ படைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். 

இந்தப் படத்தில், விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கெனவே, முதற்கட்டமாக சென்னையிலும், அடுத்த கட்டமாக டெல்லியிலும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தொடர்ந்து, 3-வது கட்டமாக மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, தற்போது  4-வது கட்ட ஷுட்டிங்குக்காக கர்நாடகாவில் முகாமிட்டுள்ளது. 

சிமோகாவில் உள்ள சிறைச்சாலையில் நடக்கும் படப்பிடிப்பில் தளபதி விஜய் பங்கேற்றுள்ளார். அவருக்கு வசதியாக, அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை புக்கிங் செய்யப்பட்டுள்ளது. 

படப்பிடிப்புக்காக விஜய் சிமோகா வந்திருப்பதை அறிந்த ஆயிரக்கணக்கான தளபதி ரசிகர்கள், நட்சத்திர ஹோட்டலின் முன்பும், படப்பிடிப்பு தளம் அருகிலும் குவிந்தனர். அவர்களைப் பார்த்த விஜய் மகிழ்ச்சியுடன் கையசைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

https://twitter.com/Stephenvfc64/status/1205147833164165120

சிமோகாவில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேல் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள 'தளபதி 64' படக்குழு, விஜய் மற்றும் விஜய்சேதுபதி மோதும் சண்டைக் காட்சிகள் உட்பட பல முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாம்.

மிகவும் வேகமாக உருவாகிவரும் 'தளபதி 64' படத்தில், 'கைதி' புகழ் அர்ஜுன் தாஸ், சாந்தனு, '96' புகழ் கவுரி கிஷான், வி.ஜே.ரம்யா என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளங்களே நடித்து வருகின்றனர். 

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 'தளபதி 64' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.