நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் படப்பிடிப்பு தளத்தில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது. விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேப், தனியார் கல்லூரி என சென்னையின் பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் ஒரு முக்கிய காட்சிக்காக 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்த இந்த விபத்தில் லைட்டின் கீழே நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தளபதி 63-வது பட பிடிப்பின் போது ரசிகர்கள் நின்றிருந்த பகுதியின் தடுப்பு உடைந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.