ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களைத் தேர்வு செய்து வந்த நடிகர் விஜய், இனிமேல் கதையும் நல்ல இயக்குநரும் இருந்தால்தான் படம் ஜெயிக்கும் என்று அதிரடியாய் முடிவெடுத்ததன் விளைவாக தளபதி 65’படத்துக்கு இயக்குநர் மகிழ்திருமேனியை இறுதி செய்திருப்பதாக விஜய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிக்கு ரிலீஸான பிகில் படம் வசூல் ரீதியாக தப்பிப் பிழைத்தாலும் கைதியின் வெற்றிக்கு முன்னால் பெரும் அவமானத்தையே சந்தித்திருக்கிறது. எனவே இனி வெறும் ஹீரோயிஸம் மட்டும் எடுபடாது என்று முடிவெடுத்தே விஜய் மகிழ் திருமேனியை தனது அடுத்த பட இயக்குநராக டிக் அடித்திருக்கிறார். இக்கூட்டணியின் தயாரிப்பாளர் இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

தடையறத் தாக்க, மீகாமன் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக வெளிவந்த ‘தடம்’படம் தான் மகிழ் திருமேனியை சக்சஸ் ஃபுல் இயக்குநராக்கியது. நீண்டகாலமாகவே ராசியில்லாத ராஜாவாகவே இருந்த அருண் விஜய்க்கும் ஓரளவுக்கு நல்ல மார்க்கெட்டை இப்படம் உண்டாக்கித் தந்தது. மகிழ் திருமேனிக்கு விஜய் படம் கிடைத்தது ஒரு ஜாக்பாட் என்னும் சூழலில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் வில்லனாகவும் அவர் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.