பெருமளவு கல்லூரியிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் ‘தளபதி 64’படத்தின் கதை இணையங்களில் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் நடந்து வருகிறது. இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்காக ‘96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாக நடித்த கவுரி கலந்துகொண்டார்.

கவுரி என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது லீக் ஆன  நிலையில் இப்படத்தின் கதையும் கசிந்ததாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டராகும் கனவில் இருந்தார். நீட் தேர்வால் அது நிராசையாகி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இது நாட்டையே உலுக்கியது. அந்த அனிதா பாத்திரத்தில்தான் கவுரி நடிக்கிறாராம்.

கல்லூரிப் பேராசிரியராக நடிக்கும் விஜய் நீட் தேர்வுக்கு எதிராகவும் தற்காலக் கல்வி முறை முழுக்க முழுக்க தொழிலதிபர்கள் கைக்குப் போனதற்கு எதிராகக் குரல் கொடுப்பது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு ‘கதை’கிளம்பி அது இணையங்களில் வைரலாகிவருகிறது.