’சர்கார்’ படத்துக்கு அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். ’தளபதி 63’ என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் அப்படத்தின் டைட்டிலை விஜய் பிறந்த தினமான வரும் 23ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை ’மாநகரம்’,இன்னும் வெளிவராத ’கைதி’ ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்துகொண்டிருந்தன.

இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார் என்றும் அவருடன் ஐசரிகணேஷும் இணைகிறார் என்றும் செய்திகள் வந்தன.விஜய் 64 என்று கூறப்படும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் அச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில்,இதுகுறித்து தமது நண்பர்களுக்கும் நலம்விரும்பிகளுக்கும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அனுப்பியிருக்கும் செய்தியில்,விஜய்க்கு அவர் பூங்கொத்து கொடுக்கும் புகைப்படத்துடன்,...எல்லாம் வல்ல இறைவன் அருளால் 64 ஆவது படத்தை எக்ஸ்பி திரைப்பட நிறுவனத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு எங்களுக்கு மிகப்பெரிய பெருமையைக் கொடுத்திருக்கிறார் விஜய். நல்ல எனர்ஜி கொண்ட லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தத் தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று சொல்லியிருக்கிறார் பிரிட்டோ.இதுதான் இப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.