Thalaivar 170: ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து அடுத்த அதிரடிக்கு தயாரான சூப்பர் ஸ்டார்! லைகா வெளியிட்ட மாஸ் தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக நடிக்க உள்ள 170 ஆவது படம் குறித்த முக்கிய தகவல் நாளை வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 10-ஆம் தேதி வெளியான, ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தாறுமாறு ஹிட் அடித்தது. குறிப்பாக 'ஜெயிலர்' திரைப்படம் சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக, இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் இந்த படத்தில் இருந்து வந்த லாபத்தில் குறிப்பிட்ட தொகையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வழங்கினார் கலாநிதி மாறன். அதேபோல் நெல்சன் திலீப் குமாரின் அடுத்த படத்தை தயாரிப்பதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்ததுடன் அதற்கான முன்தொகையையும் வழங்கியுள்ளது. அதேபோல் அனிருத்துக்கும் குறிப்பிட்ட தொகையை வழங்கியது மட்டுமின்றி ரஜினிகாந்த், நெல்சன் திலீபி குமார், அனிரூத் ஆகியோருக்கு சொகுசு கார்களையும் பரிசாக வழங்கியது.
'ஜெயிலர்' படத்தின் வெற்றியால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திக்கு முக்காடி போய் உள்ள நிலையில், தற்போது தன்னுடைய அடுத்த படத்தின் ஷூட்டிங்கிலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் டிஜே ஞானத்தில் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170 ஆவது படம் குறித்த முக்கிய தகவல், நாளை வெளியாகும் என லைக்கா நிறுவனம் தன்னுடைய X பக்கத்தில் உறுதி செய்துள்ளது. மேலும் நாளைய தினம் ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி குறித்த தகவல் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் 4-ஆம் தேதி முதல் திருவனந்தபுரத்தில் தொடங்கும் என்கிற தகவலும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. எனினும் நாளைய தினம், என்ன அப்டேட் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.