கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று நடிகை ஸ்ரீதேவி துபாயில் உயிரிழந்தார். இந்நிலையில், சென்னை சிஐடி நகரிலுள்ள போனி கபூர் வீட்டில் இன்று ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி, குடும்பத்தினர் அனில் கபூர், மகேஷ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொதுவாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கும் நடிகர் அஜித், இந்நிகழ்வில் தனது மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார். மேலும், ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், வித்யா பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் 25 % படப்பிடிப்பு பணிகளை இயக்குநர் ஹெச்.வினோத் முடித்துவிட்டார். அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்கிறார். அதற்காக இன்று மாலை அவர்  சென்னையிலிருந்து ஹைதராபாத் கிளம்பிச்சென்றார்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் அஜித்தை வைத்து முழு படப்பிடிப்பையும் முடிக்கும் இயக்குனர், அடுத்த படத்தின் வேலைக்களையும் தொடங்க இருக்கிறார்.  மே மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.