இப்போதைக்கு ‘தல59’ என்று பெயரிடப்பட்டுள்ள, போனிகபூர் தயாரிக்கும் படம் குறித்த முக்கியமான வதந்தி ஒன்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதன் இயக்குநர் விநோத்.

நடிகை ஸ்ரீதேவிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு அவரது கணவர் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் அஜீத். ‘சதுரங்க வேட்டை’,’தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய விநோத் இப்படத்தை இயக்குகிறார். அஜீத்தின் இப்படமானது இந்தியில் அமிதாப் நடித்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்று தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. 

அச்செய்தியை நேற்றுவரை அஜீத் தரப்போ, இயக்குநர் தரப்போ மறுக்காமல் இருந்த நிலையில், இன்று சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இட்ஸ் நாட் எ பிங்க் ரீமேக்’ என்று ரத்தினச்சுருக்கமாக ட்விட் போட்டுவிட்டு தலைமறைவாகிட்டார் விநோத். 

சென்னைக்கு மிக சமீபத்தில் வந்த போனிகபூருடன் சென்று அஜீத்தை சந்தித்த விநோத் சொன்ன புதிய கதையை அஜீத் வெகுவாக ரசித்ததாகவும், அதன் பிறகே ‘பிங்க்’ ரீமேக் திட்டத்தை போனி கபூர் கைவிட்டதாகவும் தகவல். 

59 படங்களில் நடித்திருக்கும் அஜீத்துக்கு ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’,‘வரலாறு’ படங்களுக்குப் பின்னர் மூன்றாவது முறையாய் இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடாமல் தல என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது என்று பாடல் கம்போஷிங்கின் போது டைரக்டர் விநோத்திடம் சவால் விட்டிருக்கிறாராம் ரகுமான்.