பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சுவாரஸ்யமாக போகவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சியால் நடந்த ஒரே நல்ல விஷயம் தாடி பாலாஜி மற்றும் நித்யா இருவரும், தங்களுடைய கருத்து வேறுபாட்டை மறந்து மீண்டும் ஒன்றாக வாழ உள்ளதாக கூறியது தான். இதனை ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி  வரவேற்றனர்.

தாடி பாலாஜி, அவருடைய மனைவி, மகள் என மூன்று பேரும்  நிம்மதியாக தங்களுடைய வாழ்க்கையை துவங்கியுள்ளனர் என அனைவரும் நினைத்த நிலையில்,  தற்போது மீண்டும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். நித்யா, தாடி பாலாஜி மீது போலீஸ் புகாரும் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தாடி பாலாஜி தன்னுடைய பக்கத்தில் இருக்கும் நியாயம் குறித்து பேச இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது செய்தியாளர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ உள்ளதாக தெரிவித்தீர்களே? என கேள்வி எழுப்பியதற்கு...

தன்னுடைய குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கம் விஜய் டிவிக்கு இல்லை என்றும், பிக்பாஸ் செட்டில் அரங்கேறிய அனைத்துமே நடிப்பு என்றும், பிக்பாஸ் செட்டிலிருந்து வந்த பின்னர் நித்யா தன்னுடன் வாழவில்லை, கடந்த இரண்டு வருடமாக தன்னுடைய அம்மா வீட்டில் தான் வசித்து வருவதாக பாலாஜி கூறினார்.

மேலும் "தனது மனைவி நித்யாவால் தனது குழந்தையின் எதிர்காலம் பாழாவதாகவும், நித்யா உதவி ஆய்வாளர் மனோஜுடன் சேர்ந்து தனது குழந்தையின் வாழ்க்கையை சீரழித்து வருவதாகவும் கூறினார்".

எப்போதும், தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் உதவி ஆய்வாளர் மனோஜ், மற்றும் நித்யாவால் தனது குழந்தைக்கு என்றோ ஒரு நாள் ஆபத்து இருப்பது உறுதி என்றும் நித்யா காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தாடி பாலாஜி உருக்கமாக கூறியுள்ளார்.