கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நடந்த ராமோஜி ராவ் பிலிம் சிட்டி, நடிகர், நடிகைகள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் என அனைத்துமே பயோ பபுளுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. 

இருப்பினும் அண்ணாத்த ஷூட்டிங்கில் பணியாற்றி வந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து அண்ணாத்த ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு படக்குழு சென்னை திரும்பியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று நெகட்டிவ் என வந்த போதும், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் இன்று காலை திடீரென ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு இருப்பதாகவும், கொரோனா அறிகுறிகள் எதும் இன்றி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் ரத்த அழுத்த மாறுபாடு சீரானதும் சூப்பர் ஸ்டார் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டது. 

சூப்பர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியைக் கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவரை போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அதேபோல் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அப்பல்லோ மருத்துவர்களை தொடர்பு கொண்டு ரஜினியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் விசாரித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை, சகோதரர் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.