ரிலீஸ் ஆகும் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று விஷால் மிரட்டிப் பார்த்துவிட்டார். பல இயக்குநர்கள் ‘கெஞ்சி’ கேட்டிருக்கின்றனர்; ஏன் அழுதும் பார்த்துவிட்டனர். ஆனால், படத்தை முதல் நாளே ரிலீஸ் செய்வதும் அதனை சிலர் கொண்டாடுவதும் தொடர்கதையாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முதன்முறையாகத் தன்னிலை விளக்கம் கொடுக்கவைத்த பெருமை ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்துக்கே உரியதாகிவிட்டது.

நேற்றுட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருந்த செய்தி, ‘2.0 ரிலீஸான முதல் நாள் HD பிரின்ட் எங்கள் இணையத்தில் வெளியாகும்’ என்பது தான். தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ஒரு ட்விட்டர் கணக்கிலிருந்து இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டிருந்தது. தமிழ் ராக்கர்ஸ் இதுபோல முன்பே கூறியிருந்ததும், அதனை செய்துகாட்டியதும் இந்த மிரட்டலை அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள வழிவகுக்கவில்லை. முக்கியமாக, வடஇந்திய ஊடகங்கள் சரசரவென இந்தச் செய்தியைப் பதிவு செய்து ‘2.0வின் கதி அவ்வளவு தானா?’ என்று வினா எழுப்பின.

இதற்குக் காரணம் சமீபத்தில் வெளியான பிரமாண்டமான இந்திப் படம் ஒன்றையும், அனல் பறக்க வைத்த தெலுங்குப் படம் ஒன்றையும் தமிழ் ராக்கர்ஸ் அதிக தரத்தில் வெளியிட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருந்தது. இதனால், 2.0 வெளியீடு செய்தியும் வேகமாகப் பரவத் தொடங்கியது.

தமிழ் ராக்கர்ஸ் பெயர் இந்தி ஊடகங்கள் வரை பரவியதால் ‘எங்களுக்கு எந்த சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை. அப்படிப்பட்ட தளங்களில் எங்கள் பெயரில் உலா வரும் தகவல்களை நம்பாதீர்கள்’ என்று அவர்களது சொந்த இணையதளத்திலேயே அறிக்கையை வெளியிட்டிருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

எத்தனையோ ஆபத்து மிகுந்த தொழில்நுட்பத் தீவிரவாதங்களை உலகின் பல்வேறு நாடுகள் சந்தித்து வருகின்றன. ஆனால், பெரியளவில் இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை இதுவரையில் எதுவும் செய்ய முடியாததற்குக் காரணம், அரசுடன் நேரடியாகத் தமிழ் ராக்கர்ஸ் செய்யும் எந்தத் தவறுகளும் தொடர்பு ஏற்படுத்தவில்லை. இதனால் தான் 2.0 படத்தின் பிரச்சினைகளில் சிக்கிச் சீரழிய விரும்பாமல் தமிழ் ராக்கர்ஸ் எஸ்கேப் ஆகியிருக்கிறது.