பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எஸ்.பி.பி. நல்ல உடல் நலத்துடன் திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர். 


எஸ்.பி.பி. பூரண நலம் பெற வேண்டுமென கூட்டு பிரார்த்தனை ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்த இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அன்பை மட்டுமே விதைக்கத் தெரிந்தவன், பண்பாளன், மாபெரும் கலைஞன். அந்த கலைஞன் மீண்டு வரவேண்டும். நாம் மீட்டு வரவேண்டும். அதற்காக இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் திரு.இளையராஜா,  திரு.ரஜினிகாந்த், திரு.கமல்ஹாசன், திரு.வைரமுத்து, திரு.ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர் நடிகைகள்,  தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள்,  பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை (20-8-2020(வியாழக்கிழமை)) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன்” என உருக்கமாக கோரிக்கை விடுத்திருந்தார். 

அதன்படி, சரியாக இன்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி. பாடலை ஒளிக்க விட்டு தமிழக மக்கள் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.  சாலையில் ஒன்று கூடிய மக்கள் பலரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அவருடைய உருவப்படம் பதித்த பிளக்ஸ் பேனர்களை கையில் பிடித்த படியும் குரலால் தங்களை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் நல்ல படியாக மீண்டு வந்து, எங்களுக்காக பல பாடல்களை பாட வேண்டுமென வேண்டி வருகின்றனர்.