கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் படத்தை முடிக்க முடியாமலும், முற்றிலும் தயாராக உள்ள படத்தை ரிலீஸ் செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். வந்த காசுக்கு ஓடிடி-யில் ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுக்கும் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே மோதல் போக்கு அதிகரிக்கிறது. 

இது ஒருபுறம் என்றால் சினிமாத்துறையை மட்டுமே நம்பி இருக்கும்  20 ஆயிரத்திற்கும் அதிகமான பெப்சி தொழிலாளர்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். 6 மாதத்திற்கும் மேலாக தமிழ்த் திரைப்படத்துறையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பசி, பட்டினியால் வாடி வருவதாக தெரிவித்த பெப்சி, சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தது. 

பலமொழி திரையுலகினரும் மத்திய அரசுக்கு வைத்து வந்த தொடர் கோரிக்கைகளின் விளைவாக,  நடிகர் - நடிகை தவிர அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். உடை உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் உபகரணங்களை கையாளும், கலைஞர்கள் கட்டாயம் கையுறை அணியவேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஷூட்டிங்கை நடத்த அனுமதி அளித்தது. 

 

இதையும் படிங்க: “இதுக்கு டிரஸ் போடாமலேயே இருக்கலாம்”... மாளவிகா மோகனனின் அதிரடி கவர்ச்சியை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள்!

இதனைத் தொடர்ந்து இன்று செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சினிமா படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் ஷூட்டிங்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என நிபந்தனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கிடந்த தியேட்டர்களை திறக்க தமிழக அரசு இந்த முறையும் அனுமதி அளிக்காதது திரைத்துறையினர், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.