வெள்ளிக்கிழமை  படம் ரிலீஸாகிற தியேட்டர்களின் பெயரைப்போடுகிற விளம்பரங்களில் இனிமேல் தமிழ்ராக்கர்ஸின் பெயரையும் நம்பிப்போடலாம் என்கிற வரவர படம் ரிலீஸாகிற அதே தேதியில் அதுவும் படம் வெளியான ஒரு சில மணிநேரங்களிலேயே ரிலீஸ் செய்துவிடுகிறார்கள் தமிழ் ராக்கர்ஸ். அவர்களது அதே கருணைப் பார்வையோடு, மெகா பட்ஜெட்டில் ரிலீஸாகி இன்று திரைக்கு வந்திருக்கும் ‘காப்பான்’படமும் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களுக்கும் முன்பே ரிலீஸுக்குத் தயாராக இருந்த கே.வி.ஆனந்த்,சூர்யா, லைகா புரடக்‌ஷன்ஸ் கூட்டணியின் ‘காப்பான்’படம் இன்று ரிலீஸாகி கலவையான அபிப்ராயங்களைப் பெற்றுவருகிறது. கண்டிப்பாக வெற்றி என்று சொல்லக்கூடிய படமும் அல்ல. அதே சமயத்தில் ‘என் ஜி.கே’ அளவுக்கு சொதப்பலும் இல்லை என்ற ரிப்போர்ட்களே இதுவரை ‘காப்பான்’படம் குறித்து வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு காட்சிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், ஒரு பெரும் உழைப்பின் வயிற்றில் அடிக்கும் சம்பவங்களின் தொடர்ச்சியாக தமிழ் ராக்கர்ஸ் தங்கள் இணையதளத்தில் ‘காப்பான்’படத்தின் ஹெச்.டி.பிரிண்டை ரிலீஸ் செய்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் நல்லபடியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது தமிழ் ராக்கர்ஸை எதிர்த்து குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வரும். இப்போது அந்த பாழாய்ப்போன சடங்கைச் செய்யக்கூட ஆட்கள் இல்லை.