"பிகில்" படத்தில் விஜய்யுடன் இணைந்து கால் பந்தாடிய கதிர், தனியாக கால் பந்து விளையாடி கலக்கியுள்ள படம் "ஜடா". அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ரோஷினி பிரகாஷ், சுவாஸ்திகா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தி போயட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் வெளியான மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிப்பதற்குள்ளாக படக்குழுவினரின் தலையில் பேரிடி ஒன்று விழுந்துள்ளது. 

கால் பந்தாட்டத்திற்கு பின்னால் உள்ள அரசியலை ஒளிவு மறைவின்றி "ஐடா" படம் எடுத்துரைத்துள்ள ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். "பிகில்" படத்தில் சில காட்சிகளில் விஜய் உடன் கால் பந்து விளையாடி இருந்தாலும், இந்த படத்திற்காக பிரத்யேக கால் பந்து பயிற்சிகளில் ஹீரோ கதிர் ஈடுபட்டார். முதல் பாதியில் கால் பந்து விளையாட்டையும், இரண்டாவது பாதில் லேட்டஸ்ட் ட்ரெண்டான பேயையும் வைத்து கதை சொல்லியுள்ளார் இயக்குநர். சில குறைகள் இருந்தாலும் "ஜடா" படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்தது.

வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சமயத்தில், "ஜடா" படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் அந்த படத்தை திருடி ஆன்லைனில் ரிலீஸ் செய்துள்ளது. இந்த செய்தியைக் கேட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில், கைதி ஆகிய படங்களையும் சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் ரிலீஸ் செய்தது. எப்போதும் உச்ச நடிகர்களையும், பிரம்மாண்ட பட்ஜெட் படங்களையும் மட்டுமே குறிவைத்து தாக்கும் தமிழ் ராக்கர்ஸ், இந்த முறை வளர்ந்து வரும் நடிகரான கதிரின் படத்தை டார்கெட் செய்துள்ளது. அரும்பாடு பட்டு உழைத்த அறிமுக இயக்குநர் குமரன் உள்ளிட்டோரது கனவை தமிழ் ராக்கர்ஸ் எளிதாக தகர்த்துள்ளது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.