தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் விஷால் அணியினரின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தனி அதிகாரியின் கண்காணிப்பில் தேர்தலை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்தக்கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூன் 30க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு  ஜூன் 21ம் தேதி தேர்தலை நடத்துவது என தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள்  தொடங்கப்பட்டன. 

எனினும் அப்போது நிலவி வந்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீக்க கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும், அதுதொடர்பான அறிக்கையையும் அக்டோபர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

 

இதையும் படிங்க: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் புடவையில்... அஜித் மச்சினிச்சி ஷாமிலி கொண்டாடிய கலக்கல் தீபாவளி...!

ஆனால் கொரோனா பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வருவதால் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து நீட்டிக்கும் படி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தரப்பு மீண்டும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி ஆஷா, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமெனவும், சிறப்பு அதிகாரியான ஒய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

 

இதையும் படிங்க: “சூரரைப் போற்று” படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?... தியேட்டர் உரிமையாளர்களை திகைக்க வைத்த சாதனை...!

இதையடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெயச்சந்திரன் நவம்பர் 22ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். 2020 - 22ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் என்றும், அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கலை கல்லூரியில் காலை 8மணி முதல் மாலை 4மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். ​முதலில் வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 22ம் தேதியே முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது மறுநாள் அதாவது நவம்பர் 23ம் தேதி தான் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் நடத்தும் அதிகாரியான ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.