பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 6 தினங்களுக்கு விடுமுறை அறிவித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனால் தற்போது பொங்கல் வெளியீடாக வர உள்ள 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்களுக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த வருட பொங்கலுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க வருகிறது. 

இந்த இரண்டு படங்களுமே, ஜனவரி 10ஆம் தேதி அன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளதால் தற்போதே இரு தரப்பு ரசிகர்களும் படங்களை பார்க்க தயாராகி விட்டனர். இந்நிலையில் 11ஆம் தேதி மற்றும் 14ஆம் தேதி ஆகிய இரு நாட்களும் வேலை நாட்களாகவும், அதன் பின் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் விடுமுறை நாட்களாகவும் இருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், ஜனவரி 14ஆம் தேதி விடுமுறை தினம் என்றும், அதற்கு பதிலாக பிப்ரவரி 9ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவித்துள்ளது.

 இந்த அறிவிப்பால் ஜனவரி 12 முதல் 17 வரை தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு நாட்கள்,  இரண்டு படங்களையும் ஐந்து காட்சிகள் திரையிட அரசு அனுமதியும் கொடுத்துள்ளதால் 'பேட்ட', 'விஸ்வாசம்' இரண்டு படங்களுக்கும் அதிர்ஷ்டமாக அமைத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை என்பதால் எதிர்ப்பார்த்ததை விட இரு படங்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.