Asianet News TamilAsianet News Tamil

’தமிழ்ராக்கர்ஸ் பற்றிய ரகஸியத்தை விஷால் வெளியிடாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம்...

 தயாரிப்பாளர் சங்கத்திற்கு பல புகார் மனுக்கள் அளித்தும், நேரில் முறையிட்டும் எவ்வித உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நாங்கள் இருவரும் தன்னிச்சையாக எங்களது திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்த திரையரங்க உரிமையாளர்கள், பணியாளர்கள் மீதும் சட்டப்படி புகார் அளித்து உரிய முகாந்திரம் இருந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை நடந்து வருகிறது.

tamil film producer council issues
Author
Chennai, First Published Jan 7, 2019, 11:10 AM IST

ஒரு பொது நிகழ்ச்சியில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும்  நபர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், விரைவில் அவர்களை பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் சட்டத்திற்கு முன்பும் இழுத்து வந்து நிற்க வைப்பதாக பகிரங்கமாக அறிவித்த விஷால் இதுவரை மவுனம் காப்பது ஏன் என்பது உட்பட நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சில தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடித விபரம் வருமாறு...

அனுப்புநர்
வாசன் @ சக்தி வாசன், 
வாசன் ப்ரொடக்ஷன்ஸ் ( ராஜா ரங்குஸ்கி )
9884222200.

ஷே. முகமது அஸ்லம்,
பிலிம் பாக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் ( ஒரு குப்பை கதை )
9444386766.

தி.நகர், சென்னை.

பெறுநர் 

தலைவர், செயலாளர், மற்றும் நிர்வாகிகள், 
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
தி.நகர், சென்னை.

பொருள் : சிறு தயாரிப்பாளர்களின் நலன்களை காக்கத் தவறி, இணையதளத்தின் வாயிலாக நடைபெறும் திரைப்படத் திருட்டைத் தடுக்கத் தவறிய சங்க நிர்வாகிகளின் போக்கை கண்டித்தும், இது குறித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு மற்றும் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்து தங்களுக்கு அறிவிப்பு கொடுத்தல் – தொடர்பாக.tamil film producer council issues

நாங்கள் இருவரும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் என்பது தங்கள் அறிந்ததே. பெரும் முதலீட்டில், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில், பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து, பல நபர்களிடம் கடன் பெற்று, நாங்கள் முறையே ‘ராஜா ரங்குஸ்கி’ மற்றும் ‘ஒரு குப்பை கதை’ ‘தொட்ரா’ ஆகிய தமிழ் திரைப்படங்களை மிகுந்த தரத்தோடு தயாரித்து, கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழக திரையரங்குகளில் வெளியிட்டோம்.

மேற்படி, மூன்று திரைப்படங்களுமே நல்ல கதை அம்சம் மற்றும் தொழில் நுட்பத் திறனோடு தயாரிக்கப்பட்ட தரமான திரைப்படங்கள் என்று அனைத்து மட்டத்திலும், பத்திரிக்கைகளிலும் பாராட்டப் பெற்றது என்பது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில் எங்கள் திரைப்படங்கள் வெளியான அன்றே ‘கரூர் கவிதாலயா மற்றும் கரூர் எல்லோரா, மயிலாடுதுறை கோமதி’ ஆகிய திரையரங்குகளில் காட்சியிடப்பட்டபோதே, அதிநவீன உயர் தொழில் நுட்ப CAM CARDER கேமராவை பயன்படுத்தி திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு அன்றைய தினமே திரைப்படத் தொழிலையே அழித்து வரும் திருட்டு VCD-க்காரன் உள்ளிட்ட திருட்டு இணையத்தளங்களில் (TAMIL ROCKERS, TAMIL GUN ETC…) வெளியிடப்பட்டுவிட்டது.tamil film producer council issues

அதனால், எங்களது மூன்று திரைப் படங்களுக்கும், பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்து பெருத்த வசூல் நட்டத்தை சந்தித்தது.

எங்களது திரைப்படங்கள் மட்டுமின்றி, கடந்த ஆண்டு வெளியான சிறு தயாரிப்பாளர்களின் அத்தனை படங்களின் நிலையும் இதுவே.

இது குறித்து உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு பல புகார் மனுக்கள் அளித்தும், நேரில் முறையிட்டும் எவ்வித உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நாங்கள் இருவரும் தன்னிச்சையாக எங்களது திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்த திரையரங்க உரிமையாளர்கள், பணியாளர்கள் மீதும் சட்டப்படி புகார் அளித்து உரிய முகாந்திரம் இருந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை நடந்து வருகிறது.

அதிலும் ‘ராஜா ரங்குஸ்கி’ திரைப்படம் குறித்து மிகப் பெரிய அளவில் சட்டப் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சி.பி.சி.ஐ.டி., அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டு முதன்முறையாக சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்கள் மீது திருட்டு, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காகவும், காப்புரிமை சட்டத்தின் கீழான குற்ற வழக்காகவும் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின்படியான குற்றங்களுக்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.tamil film producer council issues

மேலும் விசாரணையில் இருந்தும் கைது செய்யப்படுவதில் இருந்தும் தப்பிப்பதற்காக மேற்படி திரையரங்க உரிமையாளர்கள் பெற்ற மோசடியான முன் பிணை உத்தரவையும் எதிர்த்து தனி நபர்களாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து விசாரணை முடிவில் மோசடியாக அவர்கள் பெற்ற முன் பிணை உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

மேலும் வழக்கு குறித்து காவல்துறை கூறும் சாட்சியங்களையும், ஆவணங்களையும் நாங்களே தனி நபர்களாக நின்று பெரும் சிரமத்திற்கு இடையே தயார் செய்து கொடுத்து விசாரணை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறோம்.

இவை அனைத்திற்கும் மேலாக, திரையரங்குகளில் நடைபெறும் திருட்டுத்தன பதிவிறக்கத்திற்காக எடுக்கப்பட்ட காவல்துறை நடவடிக்கைகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பொய்யான கூற்றுகளைச் சொல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதி பேராணை மனு (W.P NO 28366/2018) தாக்கல் செய்தது.

ஒரு காலகட்டத்தில் திரையரங்க உரிமையாளர்களை திருட்டு திரைப்பட பதிவிறக்க குற்றத்திற்காக கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என ஓர் இடைக்கால உத்தரவு பெற திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முயற்சி செய்தபோது நாங்கள் தனி நபர்களாக அந்த நீதிப் பேராணை மனு விசாரணையில் எங்களது வழக்கறிஞர்கள் மூலமாக பங்கு பெற்று, உரிய வாதங்களை முன் வைத்து அந்த முயற்சியை முறியடித்தோம்.

மேலே பட்டியலிடப்பட்ட எங்களது திரைப்படங்கள் திருட்டுக்கு எதிரான சட்ட போராட்டங்களிலும் இதர நடவடிக்கைகளிலும் தயாரிப்பாளர்களின் நலன்களைக் காக்க உள்ள ஒரே அமைப்பான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடுகளவும் எங்களுக்கு எவ்வித உதவியும், ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என்பது வெட்கக்கேடான வேதனைக்குரிய நிலையாகும்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமது உறுப்பினர்களின் நலன் காக்க செய்ய வேண்டிய பணிகளை செய்யத் தவறியதால் அப்பணிகளை தனி நபர்களாக இருந்து நாங்கள் செய்து வருகிறோம்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடிப்படை நோக்கம், லட்சியம் மற்றும் பிரதான கடமை திரைப்படம் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்களின் நலன்களை பாதுகாப்பதுதான் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், நடைமுறையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில குறிப்பிட்ட நபர்களின் தொழில் நலன்களை காப்பதற்காகவும், திரைப்படங்களை திருட்டு பதிவிறக்கம் செய்யும் திரையரங்க உரிமையாளர்களை மறைமுகமாக பாதுகாக்கும் அமைப்பாக மாறி வருவது வெட்கத்திற்குரிய, வேதனைக்குரிய, கண்டனத்திற்குரிய நிலையாகும். 

உதாரணமாக…

கடந்த ஆண்டு தொடர்ந்து திரைப்பட திருட்டில் ஈடுபட்டுவரும் 9 திரையரங்குகள் குறித்து நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தொடர்ந்து போர்க் குரல் எழுப்பியதன் பேரில் செயற்குழு மற்றும் நிர்வாகிகள் குழு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அந்த 9 திரையரங்குகளுக்கு புதிய திரைப்படங்கள் வெளியிடப்படமாட்டாது என பத்திரிகைகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு தலைவர் விஷால் அவர்களால் ஆவேச பேட்டியும் தரப்பட்டது.

மேலும் இது குறித்து QUBE நிறுவனத்திற்கும், திரைப்பட உரிமையாளர் சங்கத்திற்கும் எழுத்துப்பூர்வமாக தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே தன்னுடைய திரைப்படமான ‘சண்டைக்கோழி-2’ வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் பிரச்சனை ஏதும் செய்வார்களோ என்ற அச்சத்தில், சுயலாபம் அடையும் பொருட்டு அவரது படமான ‘சண்டைக்கோழி-2’ படத்தை அந்த ஒன்பது திரையரங்குகளுக்கும் திரையிட கொடுத்து ஒரே நாளில் இருவேறு நிலைப்பாடுகளை எடுத்து தயாரிப்பாளர்களின் நலன்களை காற்றில் பறக்கவிட்டு நிர்வாகக் குழு எடுக்கப்பட்ட முடிவை மீறி தலைவரே செயல்பட்டது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

மேலும் மேற்சொன்ன நடவடிக்கைகள் முறையீடு செய்த நாங்கள் உள்ளிட்ட இதர உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே ரகசியமாக அரங்கேற்றம் செய்யப்பட்டதிலிருந்து தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளின் உண்மையான முகங்கள் தெளிவாக வெளிப்பட்டது.

பின்னிட்டு நாங்கள் உள்ளிட்ட இதர உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி கேட்ட போது திரையரங்க உரிமையாளர்களின் ஆலோசனை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட எங்களையே குற்றமிழைத்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் முன்பாக பணிவாக கை கட்டி நிற்கும் அவல சூழ்நிலையை ஏற்படுத்தியதும் மோசடியாக செயல்படும் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் என்பது அனைவரும் அறிந்ததே.

இவை அனைத்திற்கும் மேலாக திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆதரவில் இயங்கி வரும் QUBE நிறுவனம் திரைப்பட திருட்டு குற்றம் இழைத்த திரையரங்க உரிமையாளர்களை பாதுகாக்கும் வகையில் தவறான மற்றும் பொய்யான சான்றிதழ் வழங்குவதை தடுக்கக் கூறி நாங்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு செய்த முறையீடுகளும் இதுநாள்வரையிலும் கண்டுகொள்ளப்படவில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக தலைவர் விஷால் அவர்கள் திருட்டு VCD-க்காரன் மற்றும் திருட்டு இணையதளங்களை இயக்கி வரும் நபர்களை கண்டுபிடிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக பகிரங்கமாக அறிவிப்பு செய்ததோடு மட்டுமின்றி, அதன் பின்பு நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் அந்த நபர்களை அடையாளம் கண்டுவிட்டதாகவும், விரைவில் அவர்களை பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் சட்டத்திற்கு முன்பும் இழுத்து வந்து நிற்க வைப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகியும் அவர் வாய் மூடி மௌனியாக இருப்பதன் பின்னணி என்ன என்பது புரியவில்லை. இது குறித்து பலர் கேள்வி எழுப்பியும் பதில் கூற விஷால் மறுத்து வருகிறார்.

இந்த நிலை தயாரிப்பாளர்களின் நலன்களுக்கு எதிரானது மட்டுமின்றி சட்டத்திற்கு புறம்பானதாகும். ‘‘குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், ஓர் குற்றம் மற்றும் அதனை இழைத்த நபர்கள் பற்றி விவரம் அறிந்த எந்த ஓர் தனி நபரும், அந்த விவரத்தை உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிடின் அதுவே ஓர் குற்றமாகும். மற்றும் அக்குற்றத்தின் உடந்தை செயலாகவும் கருதப்படும்..’’

எனவே நாங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இதர தயாரிப்பாளர்கள் புகார் அளித்து விசாரணை நடந்துவரும் வழக்குகளில் தலைவர் விஷால் அவர்கள் சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரி முன்பாக சாட்சியாக முன்னிலையாகி திருட்டு VCD மற்றும் இணையதள திருடர்கள் குறித்து தான் அறிந்த தகவல்களை வாக்கு மூலமாக அளிக்க வேண்டிய சட்டப்பூர்வ கடமை அவருக்கு உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இந்நிலையில் அவர் ஏன் அந்த சட்டபூர்வ கடமையை நிறைவேற்றவில்லை என்பதற்கான விளக்கத்தையும், உடனடியாக சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடப்பாடும் அவருக்கு உள்ளது.

அவர் அவ்வாறாக விளக்கமளிக்க முன் வராவிடின், அவரும் திருட்டு இணையத்தளங்களுக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் செயல்படுகிறார் என்று கருத வேண்டிய சூழ்நிலையே ஏற்படும். 

மேற்சொன்ன சூழல்களை கருத்தில் கொண்டு, தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பின்வரும் 4 கோரிக்கைகள் முன் வைக்கப்படுகிறது.

கோரிக்கைகள் :

1. சங்க நிர்வாகிகள் திரைப்பட திருட்டு குறித்து நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் முன்னெடுத்து செல்ல உரிய சட்ட மற்றும் இதர நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

2. தொடர்ந்து திரைப்பட திருட்டில் ஈடுபட்டு வரும் திரையரங்குகள் என அடையாளம் காட்டப்பட்ட 9 திரையரங்குகளுக்கு புதிய மற்றும் பழைய திரைப்படங்களை வெளியிட தடை விதித்து நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.

3. QUBE நிறுவனம் தயாரிப்பாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் செயல்படவும், திரையரங்க உரிமையாளர்களுக்கு பொய்யான தவறான சான்றிதழ்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும்.

4. குற்ற எண் 175/2018 ல் CBCID, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு நிலுவையில் உள்ள வழக்கிலும் இதர மாவட்ட வீடியோ பைரஸி தடுப்பு பிரிவில் நிலுவையில் உள்ள திரைப்பட திருட்டு குறித்த அனைத்து வழக்குகளிலும் நேரடியாக, சாட்சிய முன்னிலையாகி, திருட்டு VCD-க்காரன், திருட்டு இணையதளக்காரர்கள் குறித்த தகவல்களை வாக்குமூலமாக அளிக்க வேண்டும். அந்த வாக்குமூல விபரங்களை உடனடியாக சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்சொன்ன நான்கு கோரிக்கைகளையும் இந்த அறிவிப்பு கிடைக்கப் பெற்ற 7 தினங்களுக்குள் முழுமையாக ஏற்று செயலாக்கம் செய்திட வேண்டும்.

அவ்வாறு செய்ய இயலாவிடில் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களால் சங்க உறுப்பினர்களின் நலன்களை காக்க முடியவில்லை என வெளிப்படையாக ஒப்புக் கொண்டு தார்மீக பொறுப்பேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்து புதிய நிர்வாகிகள் செயல்பட வழிவிட வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகள் ஏற்று செயலாக்கப்படாமலும் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி விலக முன்வராத சூழ்நிலையும் ஏற்படும்பட்சத்தில் நாங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட  உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு மற்றும் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதை இதன் மூலம் அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கிறோம்.

இப்படிக்கு

தமிழ்நாடு  திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன்காக்கும் நல விரும்பிகள்.

நகல் : 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள், சென்னை
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அவர்கள், புதுடெல்லி
உயர்திரு காவல் துறை தலைவர் அவர்கள், தமிழ்நாடு
உயர்திரு துணை ஆணையர்கள் தி.நகர் மற்றும் அண்ணாசாலை
உயர்திரு மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள், குற்றம்- விசாரணை மற்றும் குற்ற புலனாய்வுத் துறை (CBCID)

Follow Us:
Download App:
  • android
  • ios