சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அந்த கட்டிடத்தில் திடீரென தீப்பற்றியது. இதுகுறித்து அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி அளித்த தகவலின் பேரில், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 

உடனடியாக களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைந்தனர். இருப்பினும் தீ விபத்தில் அலுவலகத்திற்குள் இருந்த முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தது. பட்டாசு வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், வருவாய்த்துறை சிறப்பு அதிகாரி ஒருவரை அரசு பொறுப்பாளராக நியமித்துள்ளது. மேலும்  தேர்தல் குறித்த முக்கிய ஆவணங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.