வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையமானது திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. 

தென்சென்னை லோக்சபா தொகுதியில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் ராஜேஸ்வரி பிரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் சென்னையிலுள்ள விருகம்பாக்கத்தில் 109ஆவது வார்டுக்கு உட்பட்ட காவேரி பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை வாக்களிக்க அனுமதித்தது சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டு இருப்பதோடு இதேபோல வாக்காளர் பட்டியலில் பெயரில்லாத நடிகர் சிவகார்த்திகேயனும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் வாக்களித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். 

பொது மக்கள் பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க அனுமதிக்காத தேர்தல் அதிகாரிகள் பிரபல சினிமா நட்சத்திரங்களுக்கும், அவர்களுடன் வருபவர்களுக்கும் வாக்களிக்க அனுமதியளிப்பது நம்முடைய ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது எனவும் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவின் போது பாரபட்சத்துடன் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும் ஸ்ரீகாந்த் வாக்களித்த அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளதால், காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்து மறுவாக்குப்பதிவை நடத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கையாக சொல்லியிருக்கிறார்.

 

இந்த வழக்கானது நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் கறாராக தெரிவிக்கப்பட்டதை குறித்து கொண்ட நீதிபதிகள். தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.