சிரஞ்சீவிக்கு இணையான பாத்திரத்தில் நம்ம விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார் என்று விளம்பரங்களில் ஊதிப் பெருக்கப்பட்ட ‘ஷைரா நரசிம்ம ரெட்டி படத்தில் அவர் இடைவேளைக்குப் பிறகு அதுவும் ஒரு டம்மி கதாபாத்திரத்தில் வருவதால் தமிழ் ரசிகர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். அதனால் தெலுங்கில் பரவாவில்லை என்று சமாளிக்கப்படும் இப்படத்தை தமிழக ரசிகர்கள் ‘வீரபாண்டிய கட்டபொம்மன் 2019’என்று கிண்டலடித்து வருகின்றனர்.

1847 ஆம் ஆண்டு ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி.சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறதாம். அப்படிப்பட்ட நரசிம்ம ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டது. அத்தோடு நில்லாமல் அவரது தலையை சுமார் 30 வருடங்கள் வரை அகற்றாமல் கோட்டையின் முகப்பில் வைத்திருந்தது. போராட்டத்தில் குதிக்கும் மக்களை அச்சுறுத்துவதற்காகவே ஆங்கிலேயர்கள் இப்படிச் செய்தனர்.

படத்தின் துவக்கத்தில் இந்த முன்னுரையை தனது குரலில் செல்லுலாயிட் திரையில் எழுதியிருப்பவர் கமல். இந்த முயற்சி தமிழ் ரசிகர்களை உய்யலவாடா நரசிம்ம ரெட்டிதான் முதல் சுதந்திரப்போராட்ட வீரர் என்று நம்பவைப்பதற்காக.

சைரா நரசிம்ம ரெட்டியாக நடிக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார்  சிரஞ்சீவி. அவரது அனுபவம் முழுமையையும் இப்படத்தில் இறக்கியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகள் மற்றும் தமன்னா மற்றும் நயன்தாராவுடனான காட்சிகளில் சிரஞ்சீவியின் நடிப்பு சிலிர்க்கிறது.அவருக்கு  தமிழில் குரல் கொடுத்திருக்கிறார் அரவிந்த்சாமி. சிரஞ்சீவியின் ஆக்ரோஷ நடிப்புக்கு அந்தக்குரல்  கொஞ்சமும் மேட்ச் ஆகவில்லை.

சிரஞ்சீவியின் காதலியாக தமன்னா. கிளாமர் கிளியாக மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார். குறிப்பாக  நடனத்தில் அசத்துகிறார்.தமன்னா, இறந்து போகும் காட்சி அபாரம். சிலிர்க்க வைக்கிறது.சிரஞ்சீவியின் மனைவியாக நயன்தாரா. ம்ம்ம்ம்...என்னத்தைச் சொல்ல?

சைராவின் புகழைக் கேட்டு அவருடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிடும் தமிழ் வீரனாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். இதற்கு எதற்கு விஜய்சேதுபதி? கொடுமையின் உச்சம். ரிலீஸுக்கு முந்தைய விளம்பரங்களில் அவருக்குக் கொடுக்கப்பட்ட பில்ட் அப்களுக்கு முன்னால் இது ஒரு சுத்த வேஸ்ட் கேரக்டர். தெலுங்கு மார்க்கெட் என்னும் அகலக் கால் வைக்க ஆசைப்படாமல் தமிழில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் விஜய் சேதுபதி.

தேடிதெளியவேண்டிய அளவுக்கு அடையாளமே தெரியாத அளவுக்கு அமிதாப்பச்சன் இருக்கிறார். அவருக்கு நிழல் கொடுத்திருப்பவர் ஸாரி குரல் கொடுத்திருப்பவர் நிழல்கள் ரவி. பாரதிராஜாவுக்கு பாக்கியராஜ் டப்பிங் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.

சுதீப், ஜெகபதிபாபு,ஆனந்த், ரோகிணி உட்பட நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.எல்லோரும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். படத்தில்  நானும் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கே அனுஷ்காவும் இருக்கிறார். அமித்திரிவேதியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை பாத்திரங்களுக்குப் பலம் சேர்க்கிறது.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு சாமர்த்தியத்தின் உச்சம். அதிலும் தமன்னாவின் இறுதிக்காட்சியைப் படமாக்கியிருக்கும் விதம் ஆச்சர்யப்படுத்துகிறது. தமிழ் வசனங்களை விஜய்பாலாஜி எழுதியிருக்கிறார். ஆங்கிலேயரை எதிர்த்து சிரஞ்சீவி வசனம் பேசும்போது வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு வருகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்தான். இதனாலேயே இது ‘கட்டபொம்மன் 2019’என்று அழைக்கப்படுகிறது. ஏற்கனவே தெரிந்த வரலாறை திரையில் மீண்டும் சொல்ல வரும்போது திரைக்கதையில் பல திடீர் ட்விஸ்ட்கள் இருக்கவேண்டும். ஆனால் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி அதில் கோட்டை விட்டுவிட்டார் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.