நடிகை ஸ்ரீதேவியை கௌரவப்படுத்தும் வகையில் சுவிட்சர்லாந்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலிவுட் சினிமாவில் பிரபலமாகி பின்னர் பாலிவுட்டுக்கு புகுந்து, இந்திய ரசிகர்களின் மனதில் கனவுகன்னியாக இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திடீரென காலமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை பெருமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவருக்கு தேசிய விருது வழங்கியது.

 

இந்த நிலையில், சுவிட்சர்லாந்து அரசும் நடிகை ஸ்ரீதேவியை கவுரவப்படுத்தும் விதமாக அவருக்கு சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குநான யாஷ் சோப்ரா தயாரிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு தில்வாலே துல் ஹனியா லேஜாயங்கே என்ற படத்தை சுவிட்சர்லாந்தில் படமாக்கினார்.

 

அது மட்டுமல்லாமல் இவருடைய இயக்கத்தில் பல்வேறு படங்கள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்துக்கு, இந்தியர்கள் அதிகளவில் சுற்றுலா சென்றனர். இதற்காக யாஷ் சோப்ராவுக்கு அந்நாட்டு அரசு சிலை அமைத்தது. அது தவிர ரயில் ஒன்றுக்கும், ஏரி ஒன்றுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.