‘முட்டாள்கள் இந்தியாவில் மட்டுமல்ல’... திடீரென கொந்தளிக்கும் உலக பிரபலங்களுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி...!
சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா மற்றும் நடிகை மியா கலீஃபா ஆகியோரும் ட்வீட் செய்திருந்தனர். இந்தியாவின் விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிடுவதை விரும்பவில்லை என சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த 2 மாதமாக இந்த போராட்டம் நீடித்து வரும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மீண்டும் வரும் 6ம் தேதி அன்று தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டங்களை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனிடையே அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான ரிஹானா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. “நாம் ஏன் இன்னும் இப்போராட்டத்தைக் குறித்து பேசவில்லை” எனக்கூறி டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பரவி வருகின்றன.
சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா மற்றும் நடிகை மியா கலீஃபா ஆகியோரும் ட்வீட் செய்திருந்தனர். இந்தியாவின் விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிடுவதை விரும்பவில்லை என சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். தற்போது நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், பிரபலத்தை வர்த்தகம் செய்யும் முட்டாள்கள் மற்றும் அறிவற்றவர்கள் நம் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா லண்டன் போன்ற நாடுகளிலும் உள்ளனர். இந்திய ஜனநாயக அமைப்பைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பதை நிறுத்துவதே அவர்களுக்கு நல்லது என பதிவிட்டுள்ளார். எஸ்.வி.சேகரின் ட்வீட்டுக்கு வழக்கத்தை போல் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பரவி வருகிறது.