பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்  ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில், அவரது குடும்பத்தினர், நெருக்கமானவர்கள் புதிய தகவல்களை கூறிவருகின்றனர். இதனால் இந்த வழக்கில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சுஷாந்த் சிங்கின் பாதுகாவலர் பிரபல ஆங்கில தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ’’சுஷாந்திற்கு அவரது காதலி ரியா சக்ரபர்தி போதை மருந்துகளை தொடர்ந்து கொடுத்து வந்தார். இதனால் சுஷாந்த் எப்போதும் மயக்கி நிலையிலும், தூங்கிக் கொண்டும் இருந்தார். ரியா மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் சுஷாந்தின் வீட்டிற்கு அடிக்கடி தங்கள் நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்து, அவரின் பணத்தை பகட்டாக செலவு செய்வார்கள் என பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

 

இதையும் படிங்க: இரண்டாவது கணவருக்கு அவசர திருமணம்... சீரியல் நடிகை போலீசில் பரபரப்பு புகார்...!

இந்நிலையில் பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிடக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தற்போது விசாரணைக்காக மும்பை வந்துள்ள பீகார் போலீசார், சுஷாந்த் மரணம் தொடர்பான ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு தரவில்லை எனக்கூறப்படுகிறது. இதுபற்றி போலீஸ் அதிகாரி வினய் திவாரி, சரியான திசையில் வழக்கை விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் ரியாவை கைது செய்யும் திட்டம் ஏதுவுமில்லை என்றும், ஆனால் தேவைப்பட்டால் காவலில் எடுத்து விசாரிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.