பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படும் நிலையில், இதுவரை அவருடைய வீட்டில் இருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

இதனிடையே சுஷாந்த் சிங்கிற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் தொழில் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமே அவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை இளம் தலைமுறையினருக்கு தவறான உதாரணமாக மாறியுள்ளது. அந்தமான், நிக்கோபர் தீவில் உள்ள போர்ட் பிளேரில் வசித்து வந்த 15 வயது சிறுமி சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரும் சுஷாந்த் போலவே கடிதம் எதுவும் எழுதிவைக்கவில்லை. 

இதுகுறித்து விசாரணை நடத்திய அந்தமான் டிஜிபி தீபேந்திர பதக், சிறுமி கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு சிறுமி கைப்பட எழுதிய டைரியில் சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி நிறைய எழுதி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமி டைரியில் எழுதி வைத்திருந்ததை பார்க்கும் போது அவருக்கு சுஷாந்த் சிங்கை மிகவும் பிடிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. 

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் ஒருவர் தன்னை மற்றவர்கள் பெண் என கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேட்ட அந்த சிறுவன், "இப்படி ஹீரோவே தற்கொலை செய்து கொள்ளும் போது, நானும் தற்கொலை செய்து கொள்ளலாம்" என தனது சகோதரியிடம் கூறியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடர்ந்து சுஷாந்தின் தீவிர ரசிகையும், பள்ளி ஆசிரியையுமான விசாகபட்டினத்தை சேர்ந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் சுஷாந்த் இறந்த நாளில் இருந்தே மிகவும் மன உளைச்சலுடன் காணப்பட்டதாகவும், தொடர்ந்து அவருடைய வீடியோ மற்றும் புகைப்படங்களை அழுதபடியே பார்த்து கொண்டிருந்த இவர், யாரும் வீட்டில் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.