நடிப்பு திறமையை திறன் பட நிரூபித்தும், பாலிவுட் திரையுலகினர் செய்த சதியால் தான் தற்போது சுஷாந்த் உயிர் பிரிந்துள்ளதாக முன்னாள் எம்.பி.சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதே ஆகும் இளம் நடிகரான இவர், மன அழுத்தம் காரணமாக, கடந்த ஞாயிற்று கிழமை (ஜூன் 14 ) பாத்ராவில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், பாலிவுட் திரையுலகின் மறுமுகம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து, விசாரணை செய்து வரும் போலீசார்,  சுஷாந்தின் முன்னாள் காதலி, உட்பட அவருக்கு நெருங்கிய நண்பர்கள், உதவியாளர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த சல்மான் கான், கரண் ஜோகர், உள்ளிட்ட 8 பிரபலங்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி, சஞ்சய் நிருபம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் சுஷாந்த் சிங், தற்கொலை செய்து கொண்ட மகனை தேற்றும் அப்பாவாக மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய 'சிச்சோரே' படத்திற்கு பின் அடுத்தடுத்து 7 படங்களில் நடிக்க கமிட் ஆனார். 

ஆனால் பாலிவுட் திரியுலகத்தின் சூழ்ச்சியால் அந்த படங்கள் அவர் கையில் இருந்து நழுவியது என குற்றம் காட்டியுள்ளார். அதே போல் மும்பையில் நடந்த அவருடைய இறுதி சடங்கில் கூட அவருடன் நடித்த பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டார்களே தவிர முன்னணி பிரபலங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மன அழுத்தத்தில் தனியாக இருந்த போது அவரை ஆதரிக்காத பாலிவுட் பிரபலங்கள் சிலர், அவர் உயிரோடு இல்லாத போது என்னிடம் பேசி இருக்கலாம் என அனுதாப வார்த்தைகள் பேசி, நாடகமாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். சுஷாந்த் சின்னத்திரையில் இருந்து வந்துள்ளதால் அவர் சீரியல் மற்றும் வெப் சீரிஸ்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம், ஆனால் அதை மீறி அவரை மக்கள் முன்னணி நடிகராக ஏற்று கொள்வது வாரிசு நடிகர்களுக்கும், சில முன்னணி பிரபலங்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என வெளுத்து வாங்கியுள்ளார்.