கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் என்று விளையாட்டையும் விளையாட்டு வீரர்களையும் கதைக்களமாகக் கொண்டு அதிக தமிழ்ப் படங்கள் உருவாக ஆரம்பித்துள்ள நிலையில் ‘நிஜ கபடி வீராங்கனைகளையே நடித்து சுசீந்திரன் இயக்கியுள்ள ‘கென்னடி கிளப்’விரைவில் திரைக்கு வர உள்ளது.

சுசீந்திரன் எழுத்து இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார்,புதுநடிகை மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கென்னடி கிளப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அவ்விழாவில்,அகத்தியன்,எஸ்.டி.சபா,எழில்,லெனின்பாரதி, ராம்பிரகாஷ்,தயாரிப்பாளர் பி,எல்,தேனப்பன்,கதிரேசன், டி.சிவாஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.நிகழ்வில் படத்தில் பணியாற்றிய நிஜ கபடி வீரர்களும் பயிற்சியாளரும் கலந்துகொண்டனர்.

அவ்விழாவில் பேசிய இயக்குநர் சுசீந்திரன்,’நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் இது எங்களுடைய மூன்றாவது படம். என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்று தான் வெண்ணிலா கபடி குழு எடுத்தேன். என் அப்பா வேடத்தில் இப்படத்தில் நடித்தற்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கும். ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களைக் கொடுத்து விடுவேன். அதை ஒரே முறையில் நடித்து விடுவார். அவர் நடிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். சசிகுமாரிடமிருந்து 9 புது இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். டி.இமானிடம் எனக்கு பிடித்தது நேரம் தவறாமை. விவேகா நன்றாக பாடல் எழுதியிருக்கிறார்கள்.

ராஜபாண்டி இப்படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகியிருக்கிறார்கள். உதவி இயக்குநர்களுடைய கடின உழைப்பு இப்படத்தில் இருக்கிறது. கலை இயக்குநர் சேகருடன் இது எனக்கு மூன்றாவது படம். நாங்கள் நினைத்த படத்தைப் பிடிவாதமாக எடுத்திருக்கிறோம்.ஆகஸ்ட் 15 இப்படம் வெளியாகிறது. இப்படம் எங்களுடைய குடும்பப் படமாக இருந்தாலும் என் தம்பி தயாரிப்பாளராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மதுரைப் பெண் மீனாட்சி நாயகியாக அறிமுகமாகிறார்.

அடுத்துப் பேசிய இயக்குநர் சசிகுமார்,’‘கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள் தான். கபடி பயிற்சியாளர் செல்வமாகத் தான் நான் நடித்திருக்கிறேன். நல்லுச்சாமியாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார்.கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்று தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாகக் கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இசை இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்’ என்றார்.