நடிகர் சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு கிராமத்து கதையம்சம் கொண்ட 'ஈஸ்வரன்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக கிட்ட தட்ட  30 கிலோ உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்புவுடன் இயக்குனர் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். 

இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதில், உண்மையாகவே உயிருடன் மரக்கிளையில் தொங்கி கொண்டிருக்கும் பாம்பை பிடித்து சாக்குப்பையில் சிலம்பரசன் போடுவது போல காட்சி இடம்பெற்றிருந்தது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும். எனவே வன உயிரின சட்டம் 1972ன் படி சிம்பு செய்தது குற்றம் என வன உயிரின ஆர்வலர்கள் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த சர்ச்சை குறித்து சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
"சுசீந்திரன் இயக்கத்தில்‌ சிம்பு நடித்து வரும்‌ 'ஈஸ்வரன்‌ படத்தின்‌ இறுதிக்கட்டப்‌ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று' வருகிறது. சமீபத்தில்‌ படப்பிடிப்பு தளத்‌தில்‌ சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்‌சி ஊடகத்தில் வெளியானது. உண்மையில்‌, அந்தக்‌ காட்சி போலியான ப்ளாஸ்டிக்‌ பாம்புபோன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம்‌. அது படத்தில்‌ நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ்‌ செய்யப்படவுள்ளது. இந்தக்‌ காட்சியைப்‌ பற்றிய செய்தியையும்‌, புகைப்படத்தையும்‌ தயாரிப்பு நிறுவனம்‌ சார்பாகவோ மற்றவர்கள்‌ மூலமாகவோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கணினி கிராபிக்ஸ்‌ செய்யும்‌ போது இந்த வீடியோ சில நபர்களால்‌ கசிந்துள்ளது. எங்கள்‌ தரப்பிலிருந்து காட்சிகள்‌ எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள்‌ அதைப்‌ பற்றி விசாரித்து வருகின்றோம்‌.

இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்‌ ஒருவர்‌ அளித்த புகார்‌ தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட்‌ எடிசன்‌ எங்களை விசாரணைக்கு அழைத்தார்‌, நாங்கள்‌ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவு படுத்தினோம்‌. அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில்‌ சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம்‌. படத்தின்‌ முழு படப்பிடிப்பும்‌ தமிழக அரசின்‌ வழிகாட்டிதலைக்‌ கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது. படம்‌ சம்பந்தப்பட்‌ட செய்திகள்‌, புகைப்படங்கள்‌ அனைத்தும்‌ ஊடகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்‌. என தெரிவித்துள்ளார்.