நேற்றுவரை செல்வராகவனின் என்.ஜி.கே’பட புரமோஷனில் ஈடுப்பட்டு வந்த நடிகர் சூர்யா அப்படம் படுதோல்வி என்பது உறுதியானது தனது கவனத்தை அடுத்த படமான ‘சூரரைப் போற்று’வின் பக்கம் திருப்பியுள்ளார்.

சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் "சூரரைப்போற்று" படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரலாற்று படம் என்று செய்திகள் வெளியானது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்திய பேட்டியில் சூரரைப்போற்று படம் குறித்து பேசிய சூர்யா "சூரரைப்போற்று" வரலாற்று படம் என்று செய்திகள் பரவிவருகின்றன. ஆனால் இது உண்மையல்ல. இருப்பினும் இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர்  சுதா என் உடன்பிறவா தங்கை, ஆயுத எழுத்து படத்திலிருந்தே அவரை எனக்கு தெரியும். இறுதிச்சுற்று படத்தின்போதே அவருடன் பணியாற்ற விரும்பினேன். இருப்பினும் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்துள்ளது’என்று தனது கவனத்தை முற்றிலும் அடுத்த படத்தை நோக்கி நகர்த்தினார் சூர்யா.

’சிங்கம் 3’,’தானா சேர்ந்த கூட்டம்’ அடுத்து ‘என்.ஜி.கே’ என்று வரிசையாகத் தோல்விப் படங்கள் கொடுத்துவரும் நிலையில் அடுத்து ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய நெருக்கடியான சூழலில் இருக்கிறார் சூர்யா.