சூா்யா நடிக்கும் ‘சூரரைபோற்று’ திரைப்படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் பரவியதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் தரப்பு நேற்று சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

நடிகா் சூா்யா நடித்து வரும் ‘சூரரைபோற்று’படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.இத்திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை தயாரிக்கும் பணி சென்னை ஆழ்வாா்பேட்டை சீத்தாம்பாள் காலனி 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு தனியாா் 2டி லேப்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகா் சூா்யா நடித்த காட்சி ஒன்றும் ட்ரெயிலர் ஒன்றும் கடந்த புதன்கிழமை எடிட் செய்யப்பட்டு  படக்குழுவினருக்கு திரையிடப்பட்டதாம்.

அதன் பின்னர் முழுமையாக தயாரான முன்னோட்ட காட்சியை அங்கிருந்த தனியார் ஊழியா்களும் திரையிட்டுப் பாா்த்தனராம். இந்நிலையில் அந்த திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி, ஒரு சமூக ஊடகத்தில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளா் சு.காா்த்திகேயன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், விசாரணை செய்து வருகின்றனா். விசாரணையில், அந்த முன்னோட்டக் காட்சி அந்த ஆய்வகத்தில் திரையிட்டபோது அங்கிருந்த ஒரு ஊழியா், தனது செல் போனில் உள்ள ஒரு செயலியின் மூலம் காட்சியைப் பதிவு செய்து, சமூக ஊடகத்தின் மூலம் மற்றொரு நண்பருக்கு அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அந்த ஆய்வகத்தின் ஊழியா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.