ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை ‘கட்டம் கட்டி’ பீட்டா விலங்குகள் நலவாரியம் அமைப்பு டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளது.

ஜல்லிக்கட்டுப்போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று கூறி,பீட்டா , இந்திய விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கில் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த ஆண்டோடு சேர்த்து தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்படாமல் இருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, மீண்டும் போட்டியை நடத்த அனுமதி கோரியும், அவசரச்சட்டம் பிறப்பிக்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக மாநிலம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போரட்டத்துக்கு ஆதரவாக நடிகர் சூர்யா, உள்ளிட்ட நடிகர், நடிகைகள் தமிழ் திரைத்துறையினர் குரல் கொடுத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும், அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கூறிவந்தனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யா கூறிய கருத்தை விமர்சனம் செய்து பீட்டா அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் அரசு விவகாரத்துறை அதிகாரிநிகுஞ் சர்மா கூறுகையில், “ நடிகர் சூர்யா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் ஜல்லிக்கட்டு ஆதரவாக இப்போது குரல்க கொடுப்பதற்கு எந்த விதமான தொடர்பு இல்லை. அதிலும் குறிப்பாக சூர்யா ஜல்லிக்கட்டு ஆதரவாக குரல் கொடுப்பது அவரின் சிங்கம்-3 படத்துக்கு இலவசமாக விளம்பரம் தேடிக்கொள்ளவே அவர் குரல் கொடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப்போட்டியில் மாடுகளுடன் மனிதர்கள் மோதுவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த கொடூரமான பழக்கத்தால் இந்த விளையாட்டில் ஈடுபடுவோர் தொடர்ந்து காயம் அடைந்தும், உயிர் இழந்தும் வருகின்றனர். இந்த விளையாட்டு சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. இது மக்களின் மோசமான சிந்தனையையும் ரசனையையும் கூறும் விளையாட்டு என்றும் தெரிவித்துவிட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.