இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்து நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் "நேர்கொண்ட பார்வை".

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருவதோடு, நல்ல விமர்சனங்களும் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது. "நேர்கொண்ட பார்வை" படம் "பிங்க்" படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டிருந்தாலும், ஒரு சில காட்சிகளை அதிகரிக்கச் செய்து,  இந்த படத்தின் தன்மையையும், உயிர் ஓட்டத்தையும் கெடுக்காத வாறு, சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும், அதிகரிக்க செய்திருக்கும் இயக்குனர் எச். வினோத்தின் இயக்கத்திற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி, இப்படத்தை பார்த்த பாலிவுட் பிரபலங்களும் அஜித்துக்கும், படக்குழுவினருக்கும் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல நடிகர் சூர்யா,  படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து,  இயக்குனர் வினோத்துக்கு பொக்கே அனுப்பியும், கடிதம் எழுதியும், தன்னுடைய வாழ்த்துக்களை தெரியப்படுத்தியுள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சமீப காலமாகவே திரைக்கு வரும் சிறிய முதல் பெரிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால், அந்த படத்தின் இயக்குனருக்கு பொக்கே அனுப்பி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் சூர்யா தற்போது வினோத்திற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் சகோதரர் கார்த்தி, எச்.வினோத் இயக்கத்தில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து, அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.