குறிப்பாக, சூர்யாவின் திரைப்பயணத்தில் இவ்விரு படங்களுக்கும் தனியிடம் உண்டு எனலாம். ரசிகர்கள் கொண்டாடிய இக்கூட்டணி மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை. ஏதோ சில  மனஸ்தாபங்களால் பிரிந்த இக்கூட்டணி, இதுவரை சேரவில்லை. 

இந்நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யா - கவுதம் மேனன் கூட்டணி சேரவுள்ளதாக மலையாள நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது, இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா 'சூரரைப்போற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்தப் படம், கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகியுள்ளார். அத்துடன், அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிவாவுடனும் முதல்முறையாக சூர்யா கூட்டணி  சேர்ந்துள்ளார். 

இந்தப்படம், சூர்யாவின் 39-வது படமாக உருவாகவுள்ளது.இதற்குப் பிறகுதான், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். நீண்ட காலமாக பிரச்னைகளில் சிக்கி ரிலீசாக முடியாமல் முடங்கிக் கிடந்த கவுதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை இந்நிறுவனம்தான் வெளியிடுகிறது. 

அதற்கு கைமாறாக, அதே நிறுவனம் தயாரிக்கும் 'ஜோஸ்வா இமைபோல் காக்க' படத்தையும் கவுதம் மேனன் இயக்குகிறார். இந்தப் படத்தை முடித்துக் கொடுத்தப் பிறகு, கவுதம் மேனன் சூர்யாவுடன் கூட்டணி சேர்வார் என்றும் மலையாள நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. 
இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில், சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் 3-வது படமாக அது இருக்கும். பல்வேறு காரணங்களால் சேர முடியாமல் இருக்கும் இக்கூட்டணி, இந்த முறை நிச்சயம் சேரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.