நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான NKG படத்தை தொடர்ந்து, இவர் பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள, 'சூரரை போற்று' திரைப்படம், கொரோனா பிரச்சனை காரணமாக வெளியாகாமல் உள்ளது. எனினும் இந்த படம் தமிழக உரிமை மட்டும் 55 கோடிக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'அருவா' படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடி வாசல்' படத்திலும் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வந்த போதிலும்... கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் உள்ளது.

இதை தவிர நடிகர் சூர்யா, வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த வெப் சீரிஸை இயக்க உள்ள இயக்குனர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 9 எபிசோடாக எடுக்க உள்ள இந்த வெப் சீரிஸை 9 இயக்குனர்கள் இயக்க உள்ளனர். அவர்களில், இயக்குனர் மணிரத்னம் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நடிகர் சித்தார்த் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரும் இந்த வெப் சீரிஸ் மூலம் இயக்குனர்களாக மாற உள்ளனர்.

மேலும் சூர்யா நடிக்க உள்ள பெரும் பகுதியை, இயக்குனர் ஜெயேந்திரன் பஞ்சாபிகேஷன் என்பவர் இயக்க உள்ளார். இவர் நடிகர் சித்தார்த், பிரியா ஆனந்தி, நித்தியமேனோன் ஆகியோர் நடிப்பில் வெளியான 180 படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.