சிவா இயக்கவிருக்கும் ‘சூர்யா 39’படத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த டீமையும் அப்படியே கமிட் பண்ணவிருப்பதாக தகவல்கள் நடமாடுகின்றன. ஆனால் கதாநாயகி நயன்தாராதானா என்பது மட்டும் உறுதி செய்யப்படவில்லை.

‘விஸ்வாசம்’ சிவா சூர்யாவை வைத்து அடுத்து இயக்கவிருக்கும் படம் சில தினங்களுக்கு முன்பு அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. துவக்கத்தில் இப்படத்தில் பணியாற்றவிருப்பதாக ஒளிப்பதிவாளர் வெற்றியும் எடிட்டர் ரூபனும் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசையமைப்பாளராக ‘விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றிய டி.இமானே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

லேட்டஸ்டாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கிடைத்த தகவலின்படி செண்டிமெண்ட் காரணமாக  ‘விஸ்வாசம்’ படத்தில் பணியாற்றிய அத்தனை டெக்னீஷியன்களும் அப்படியே கொத்தாக இப்படத்தில் பணிபுரியவிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனடிப்படையில் கதாநாயகியாக மீண்டும் நயன் தாராவையே கமிட் பண்ண இயக்குநரும் சூர்யா தரப்பும் விரும்புவதாகவும், இவர்கள் கேட்கும் ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் ரஜினி,விஜய் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் நயன் இன்னும் தன் இறுதி முடிவைத் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.