செல்வராகவன் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில், சூர்யா நடித்துள்ள அரசியல் ஆக்ஷன் படமான என்.ஜி.கே.  இம்மாதம் இறுதியில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. பலமாதமாக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சிக்கான ஏற்பாட்டில் புதிய சாதனை ஒன்றை கேரள மாநிலத்தில் நிகழ்த்தியுள்ளார் சூர்யா.

கடந்த காலத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக  சொல்லிக்கொள்ளும்படியான  பிரமாண்ட வெற்றிப் படங்கள் அமையவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தானா சேர்ந்த கூட்டம் படமும் மண்ணைக் கவ்வியது, போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தன்னுடைய அடுத்த அடுத்த படங்ககளை  மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறார் சூர்யா.

இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான என்.ஜி.கே ஓர் அரசியல் படமாகத் தயாராகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம் மே 31ஆம் தேதி வெளியாகிறது.

கேரளாவில் விஜய்க்குப் பின் அதிக ரசிகர்களைக் கொண்ட தமிழ் நடிகராக சூர்யா உள்ளார். இந்த நிலையில், என்.ஜி.கே. கேரளத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. கேரளாவின் ‘வி1000 லௌவர்ஸ்’ என்ற பெண்கள் அமைப்பு, மலப்புரம் சூர்யா ரசிகர் மன்றத்துடன் இணைந்து மார்ஸ் என்ற திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு பெண்களுக்கான சிறப்புக் காட்சி ஒருங்கிணைக்கப்படுவது கேரளத்தில் இதுவே முதல் முறையாகும்.

இதே மாதிரியான சிறப்பு காட்சி சமீபத்தில் தமிழில் வெளியான காஞ்சனா 3  படத்திற்கு  திருநங்கைகளுக்காகச் சென்னையில் செய்தது குறிப்பிடத்தக்கது.