முழுநேர அரசியல்வாதியானதால் திரை உலகைவிட்டு ஒதுங்கியிருந்த தேசிய விருது பெற்ற நடிகர் சுரேஷ் கோபி நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின்பு மீண்டும் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கிறார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் சுரேஷ் கோபி பகிர்ந்துள்ளார்.

நடிகரும் ராஜ்யசபா எம்.பியுமான சுரேஷ் கோபி கடந்த நான்கு ஆண்டுகளாக மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டிருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் ஷங்கர், விக்ரம் கூட்டணியின் ‘ஐ’. இந்நிலையில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிக்கும் ’தமிழரசன்’ படத்தில் முக்கிய பாத்திரமொன்றில் டாக்டராக நடிக்கிறார் சுரேஷ் கோபி.

இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் ‘படங்களில் நடிக்கும் முடிவை சில நேரங்களில் நாம் கேட்கும் கதை மாற்றிவிடுகிறது. ‘தமிழரசன்’ படக்கதையையும் எனது கேரக்டரையும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் சொன்னபோது, மறுப்பு சொல்ல வாய்ப்பே இல்லை என்று தோன்றியது. இதற்குப் பின்னர் வேறு படங்களில் நடிப்பேனா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்கிறார்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் ப்ரணவ் மோகன் ராஜா முக்கியப்பாத்திரத்தில் நடிக்க வில்லன் நடிகர் சோனு, முனீஷ்காந்த், யோகி பாபு, பூமிகா, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.