கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவிட்டது போல் தோன்றினாலும் நாளுக்கு நாள் அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அப்படியே தான் இருக்கிறது. உலகம் முழுவதையும் வாட்டி வதைத்த கொரோனா தொற்றால் சரிவின் விழிம்பு வரை சென்ற திரையுலகினர் தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நடிகர், நடிகைகள் பலரும் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் நிலையில், அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

மலையாள நடிகர் பிருத்விராஜ், தமன்னா ஆகியோர் படப்பிடிப்பில் பங்கேற்ற போது கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவிக்கு கடந்த மாதம் 9ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வந்த “ஆச்சார்யா” படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் முடிவு தவறாக வந்துள்ளதாகவும், தனக்கு தொற்று இல்லை என்றும் சில நாட்களுக்குப் பிறகு சிரஞ்சீவியே ட்விட்டரில் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஐதராபாத் சென்ற சரத்குமாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு சில அறிகுறிகள் தென்படவே பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இன்று வந்த சோதனை முடிவுகளின் படி அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சரத்குமாரின் மனைவியும்,  பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், இன்று சரத்திற்கு ஐதராபாத்தில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நல்ல உடல் நலத்துடனும், சிறப்பான மருத்துவர்களின் சிகிச்சையிலும் இருக்கிறார். அடுத்த நாட்களில் அவரது உடல்நிலை குறித்து வரும் தகவல்களை நானே உங்களுக்கு தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.