சென்னை வடபழனியில் இருக்கும் ஆற்காடு சாலை சேர்ந்தவர் ஜெனிபர். வயது 24 . சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் குறும்படங்களில் துணை நடிகையாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பக்ருதீன். இவரும் துணை நடிகராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் பக்ருதீன் மீது ஜெனிபர் புகார் அளித்துள்ளார். அதில் துணை நடிகரான பக்ருதீன் ஆபாசமாக தன்னை படம் பிடித்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறியிருக்கிறார். மேலும் தனது தாயாரை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் புகார் செய்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் பக்ருதீனை பிடித்து வடபழனி மகளிர் காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் அவர் ஜெனிபரை ஆபாச படம் எடுத்து மிரட்டியது உறுதியானது. இதையடுத்து பக்ருதீன் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே ஜெனிபர் தன்னிடமும், தனது நண்பர்களிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டதற்கு தன் மீது பொய் புகார் அளித்திருப்பதாகவும் காவல்துறையில் பக்ருதீன் புகார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.