Superstar Rajinikanth excellent interview

ரஜினி பத்திரிகைகளுக்கோ, மீடியாவுக்கோ பிரத்யேகமாய் முழு நீள பேட்டி கொடுத்துப் பல வருடங்களாகிவிட்டது. ஆனால் ஒரு காலத்தில் அப்படியில்லை! அடிக்கடி பேட்டிகளுக்கு ஓ.கே. சொல்வார். அப்படியான ஒரு பேட்டிதான் இது

’நான் அன்னைக்கு சொன்னதைத்தான் இன்னைக்கு சொல்றேன். இன்னைக்கு சொல்றதைத்தான் என்னைக்கும் சொல்வேன்!’ என்பது ரஜினியின் சினிமா பஞ்ச். அது அவரது யதார்த்த வாழ்க்கைக்கும் பொருந்துகிறதா என்று பாருங்கள்...

நீங்கள் யாரை மதிக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது?

நான் எல்லோரையும் மதிக்கிறேன். நான் எனக்காக வாழ்கிறேன். மற்றவங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பூர்வஜென்மம், மறுபிறவி ஆகியவற்றில் எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. 

ஆன்மீகம் அவ்வளவு பிடிக்குமா?

’நான்’ என்கிற என்னுடைய ஜீவாத்மா, எல்லாம் வல்ல பரமாத்மாவின் ஒரு பகுதியே. என் ஜீவாத்மாவுக்கு ஒரே சொந்தம் பரமாத்மாதான் என்று நம்புபவன் நான். 

உங்கள் குடும்பத்துக்கு, குழந்தைக்கு என்ன செய்வீர்கள்?

என் குடும்பத்துக்காக முடிந்தளவு சம்பாதிப்பேன். சந்தோஷமாக வாழ்வேன், வாழவைப்பேன். குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், ஆரோக்கியமான வாழ்க்கையும் அமைத்துக் கொடுப்பேன். அந்தப் படிப்பின் மூலம் அவர்கள் சிந்திக்கும் திறமையை வளர்த்துக் கொண்டு சொந்தக் காலிலேயே நின்ற்ஜு சம்பாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம். 

பணம், புகழ் பற்றி என்ன நினைக்கிறீங்க?

என் குறைந்த கால அனுபவத்தில் நான் அவை பற்றிக் கற்றுக் கொண்டது, பணமும், புகழும் நிலையானதில்லை. அவை கிடைத்ததும், வாழ்க்கையில் எல்லாமே கிடைத்தது போல் நிம்மதி அடைவது பைத்தியக்காரத்தனம். 

தொடர்ந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற துடிப்புடன் ஓடுவதே உத்தமம். 

ரஜினியின் விருப்பு - வெறுப்புகள்:

விருப்பம் : என் தொழில், தனிமையாய் கார் ஓட்டுவது

மறக்க விரும்புவது: மனதை அலைக்கழிக்கும் விஷயங்களை

மகிழ்ச்சி தருவது: தனிமையில் இருப்பது

தவிர்க்க விரும்புவது: ஜால்ரா நபர்களை

தெரிந்து கொள்ள விரும்புவது: நிம்மதியாக வாழும் முறையை

வரவேற்பது: என் தொழிலை பாதிக்காத கிசுகிசுக்களை

பழகியதில் பிடித்த நடிகர்கள்: கமல், ஸ்ரீபிரியா, சுஜாதா, விஜயகுமார்

மறக்காமல் இருக்க விரும்புவது: கே.பாலசந்தர்

விருப்பமான உடை: கறுப்பு நிற உடைகள்

முதல் சம்பளத்தில் வாங்கிய பொருள்: சிகரெட் பாக்கெட்

ஏண்டா சென்னைக்கு வந்தோம்! என்று நினைத்த நாள்? மதுவிலக்கை அறிமுகப்படுத்தியபோது அப்படி நினைத்தேன்.

தாங்கிக் கொள்ள முடியாத பிரிவு? கண்டக்டர் வேலையை விட்டது

உங்களின் மைனஸ் பாயிண்ட்: கோபம்

செக்ஸைப்பற்றி உங்கள் கண்ணோட்டம்: தெய்வீகம்

அதிகமாய் கோபம் வந்தால் என்ன செய்வீங்க?: அதிவேகமாய் கார் ஓட்டுவேன்.

உடல் அழகில் உங்களைக் கவர்ந்த நடிகை?: ரேகா

உங்களால் மாற்றிக் கொள்ள முடியாத குணம்?: வெட்டு ஒன்று துண்டு ரெண்டாய் பேசுவது. 

உண்மையான சந்தோஷம் எதில் இருப்பதா நினைக்கிறீங்க?: நேர்மையான, நாணயமான வாழ்வில்.

பத்திரப்படுத்தி பாதுகாக்கும் பொருள்: ’முள்ளும் மலரும்’ பார்த்துவிட்டு பாலசந்தர் சார் எழுதிய கடிதம். 

உங்களால் நன்றிக்கடன் செலுத்த முடியாத உதவி: என்னைப் பெற்றெடுத்ததன் மூலம் தாய் செய்த உதவி.