சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர் திங்கள்கிழமை பத்ரிநாத் தாமிற்குச் சென்று பத்ரி விஷால் பகவானுக்கு வழிபாடு நடத்தினார்.

Rajinikanth visit Badrinath Temple : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புனிதமான பத்ரிநாத் தாமிற்குச் சென்று வழிபாடு நடத்தியதாக ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு தெரிவித்துள்ளது. கோயிலுக்கு வந்த ரஜினிகாந்தை, பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவினர் அன்புடன் வரவேற்று, பத்ரி விஷால் பகவானின் ஆசீர்வாதமாக பிரசாதம் மற்றும் துளசி மாலையை வழங்கினர். கேதார்நாத் தாம் கோயிலின் நடை இந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி குளிர்காலத்திற்காக மூடப்படும் என்று ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் குழு (BKTC) தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுலா

பத்ரிநாத் தாம் கோயிலின் நடை இந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி மதியம் 2:56 மணிக்கு குளிர்காலத்திற்காக மூடப்படும் என்று கோயில் குழு ஏஎன்ஐ-யிடம் தெரிவித்துள்ளது. சார் தாம் புனித யாத்திரை தலங்களில் ஒன்றான பத்ரிநாத், விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. கேதார்நாத் கோயிலும் வட இந்தியாவில் உள்ள சார் தாம் தலங்களில் ஒன்றாகும், இது கடல் மட்டத்திலிருந்து 3,584 மீட்டர் உயரத்தில் மந்தாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

1975-ல் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார். கே.பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஐம்பது ஆண்டுகால திரை வாழ்க்கையில், இந்த சூப்பர் ஸ்டார் 'சிவாஜி: தி பாஸ்', 'ரோபோ', 'ரோபோ 2.0', 'தளபதி', மற்றும் 'ஜெயிலர்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக கூலி திரைப்படம் வெளியாகி இருந்தது.

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினி உடன் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.