மாரிமுத்து இறப்பு அதிர்ச்சியளிக்கிறது! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்!
இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய X பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

பிரபல இயக்குனரும் - நடிகருமான மாரிமுத்து, இன்று காலை டப்பிங் ஸ்டுடியோவில் டப்பிங் பணியை மேற்கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரிந்தார். பேச்சு மூச்சு இல்லாமல் சுயநினைவை இழந்து கொண்டிருந்த மாரிமுத்துவை, டப்பிங் ஸ்டூடியோவில் இருந்தவர்கள் கார் மூலம் அருகே இருந்த சூர்யா மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்த தகவலை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் இந்த தகவல், மாரிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் எதிர்நீச்சல் சீரியல் குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டது. 57 வயதில் பல கனவுகளுடன், ஏழ்மையை ஜெயித்து வாழ்க்கையில் மெல்ல மெல்ல வெற்றிப் பாதையில் பயணிக்க துவங்கிய மாரிமுத்து திடீர் என உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாரிமுத்துவின் மரணத்திற்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் போட்டுள்ள பதிவில், "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி என தெரிவித்துள்ளார்".
மாரிமுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'ஜெயிலர்' படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரஜினிகாந்த் உடன் பயணிக்கும் சில காட்சிகளிலும் மாரிமுத்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பதிவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.