65 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெளியான ஏவிஎம் பட தலைப்பு... அறிமுக நாயகன் வெற்றி பெற வாழ்த்திய சூப்பர் ஸ்டார்...!

1954ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி, பண்டரிபாய் நடிப்பில் வெளியான திரில்லர் மூவி அந்த நாள். அப்போதைய காலக்கட்டத்தில் மறக்க முடியாத திரைப்படமான அந்த நாள் படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்து இருந்தது. பிரபல திரைக்கதை ஆசிரியர் ஜாவர் சீதாராமன் திரைக்கதையை, வீணை எஸ்.பாலச்சந்தர் சிறப்பாக இயக்கியிருந்தார். அந்த தலைப்பை 65 ஆண்டுகளுக்குப் பிறகு ஏவிஎம் நிறுவனம் தற்போது பயன்படுத்த உள்ளது. 

கிரீன் மேஜிக் நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தில், ஏவிஎம் குடும்பத்தைச் சேர்ந்தவர் நடிக்க உள்ளார். ஏவிஎம் சரவணனின் பேத்தியும், தயாரிப்பாளர் எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர் ஆர்யன் ஷாம். அவர் அந்த நாள் படத்தில் அறிமுக ஹீரோவாக களம் இறங்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் வி.வீ. இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு என்.எஸ்.ராபர்ட் சற்குணம் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். 

போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அந்த நாள் பட போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த், அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் புகழ் பெறவும், படம் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆர்யன் ஷாம், அவரது மனைவி அபர்ணா குகன் ஷாம், இயக்குநர் வி.வீ, கேமராமேன் சதீஷ் கதிர்வேல், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.