கடந்த தீபாவளிக்கு சிங்கிள் சிங்கமாக ரிலீஸாகியது நடிகர் விஜய்யின் ‘சர்கார்’ படம். ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் உள் அரசியலை கிழி கிழியென கிழித்திருந்ததோடு, தமிழக அரசு, மக்கள் நலனில் அலட்சியமாக அரசாள்வதாகவும் காட்சிகள் மற்றும் வசனங்கள் வழியே தெறிக்கவிட்டிருந்தது. இதனால் கோபம் கொண்டு பொங்கிய ஆளுங்கட்சி வட்டாரம் அந்தப் படத்துக்கு எதிராக சாட்டை சுழற்ற துவங்கியது. 

அக்கட்சியினர் சர்கார் படம் ஓடிய திரையரங்குகளில் முற்றுகை, பேனர் கிழிப்பு, ஜன்னல் உடைப்பு என்று இறங்கினர். சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைதாகலாம் எனும் சூழல் எகிற, அவர் முன் ஜாமீனுக்கு ஓடினார். பெரும் ரகளைக்கு பிறகு படத்தின் தயாரிப்பு தரப்பு, சர்ச்சையான காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கியது. ஆனால் அதற்குள் படத்தை பல லட்சம் பேர் பார்த்துவிட்டு தமிழக அரசை கரித்துக் கொட்டினர், கூடவே வெட்டப்பட்ட அந்த காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் டிஜிட்டல் துல்லியத்தில் பரவின. 

டெலிட் பண்றோமுன்னு நம்மகிட்ட சொல்லிட்டு, பைபாஸ்ல வாட்ஸ் அப் வழியே கசிய விட்டுடாங்க.’ என்று துள்ளினார்கள் அ.தி.மு.க.வின் அதிகார மையங்கள். ஏற்கனவே நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறது என்று பேசப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் மூலம் அவருக்கும் ஆளும் தரப்புக்கும் இடையில் பெரும் போர் மூண்டு அடங்கியது. 

சில மாதங்கள் ஓடிவிட, இதோ தை பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்துக்கு சைலண்டாக ஆனால் மிக ஷார்ப்பாக ஆப்பு வைக்கும் முயற்சியில் ஆளும் தரப்பு இறங்கியிருக்கிறது! என்கிறார்கள். காரணம்? அ.தி.மு.க.வை அலற வைத்த சர்கார் படத்தை தயாரித்த  கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்தான் பேட்ட படத்தையும் தயாரித்திருக்கிறது. தி.மு.க. தலைமை குடும்ப உறுப்பினரான கலாநிதி, தங்களை வேண்டுமென்றே சர்கார் படம் மூலம் அசிங்கப்படுத்தி வம்பிழுத்துவிட்டார்! என்று அவர் மீது கோபத்தில் இருக்கும் அ.தி.மு.க. தரப்பு அவரது அடுத்த படமான இந்த பேட்ட படத்தின் பிஸ்னஸை அடிச்சு துவம்சம் செய்ய துடிக்கிறது. 

பிஸ்னஸ்ல கை வெச்சால்தான் கம்முன்னு அடங்குவாங்க. மற்றபடி என்ன பண்ணினாலும் திமிறத்தான் செய்வாங்க. அதனால பேட்ட படத்துக்கு ஹைடெக் தியேட்டர்கள் கிடைக்க விடாம பார்த்துக்கணும். தியேட்டர் உரிமையாளர்கள் தரப்புல சொல்லி அதுக்கேத்த மாதிரி டியூன் ஆக சொல்லுங்க. கஷ்டப்பட்டுதான் படத்தை ரிலீஸ் பண்ணனும். ரிலீஸானாலும் கூட அந்த பெரிய பட்ஜெட்டை லாபத்தோட திரும்ப எடுக்க முடியுமா?ன்னு அவங்க தினம் தினம் கவலைப்பட்டு பி.பி. ஏறணும்.” என்று  துடிப்பான அமைச்சர் ஒருவர் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு சொன்னாராம். இதை தலைமை எந்த சலனமுமில்லாமல் கேட்டுக் கொண்டதாம். 

கலாநிதி மாறன் மீது கோபம் இருப்பதில் நியாயம் உள்ளது, ரஜினி என்ன செய்தார்? என்று கேள்விகள் எழலாம். சர்கார் படத்துக்கு எதிரான அ.தி.மு.க.வின் கொதிப்பை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் ரஜினி. அந்த கோபம்தான். அதுபோக, அரசியலுக்குள் வரப்போகும் ரஜினியால் தங்களது வாக்கு வங்கி பாதிக்கும்! எனும் எரிச்சலில் உள்ள ஆளும் தரப்புக்கு, சமீபத்தில் தனது மனைவி லதா நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழாவில் ரஜினி பேசிய அரசுக்கு எதிரான பேச்சுகளும் இந்த கோபத்தின் டிகிரியை தாறுமாறாக உயர்த்திவிட்டதாம். ஆக எல்லாமாக சேர்ந்து பேட்ட- படத்தில் ஓட்ட போடும் முடிவை எடுக்க வைத்துவிட்டது! என்கிறார்கள். 

ஆனால்  அ.தி.மு.க. தரப்பின் இந்த அதிரடி பிளானை பக்காவாக ஸ்மெல் செய்துவிட்ட சன்பிக்சர்ஸ் நிறுவனம், பெரிய சிரிப்புடன் அந்த சவாலை எதிர்கொண்டிருக்கிறது. ‘முடிஞ்சா தடுக்கட்டும் பார்க்கலாம். வளைச்சு வளைச்சு ரிலீஸ் பண்ணி வசூலை அள்ளி அவங்களுக்கு சுடச்சுட பொங்கல் கொடுக்குறோம்!’ என்று கெத்தாக சவால் விட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தை தயாரிப்பு தரப்பே ரஜினியின் கவனத்துக்கு கொண்டு போக, ’வர்றோம்! நிக்குறோம்!’ என்றாராம். ஆக பொங்கலிலும் பட்டாசு வெடிக்கும்!