என்னை வாழ வைக்கும் தெய்வங்களே என்று எப்போதும் தனது ரசிகர்களை அழைக்க கூடியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர். முதலில் வில்லனாக அறிமுகமாகி, குணச்சித்திர வேடங்களில் மிளிர்ந்து, ஹீரோவாக அவதாரம் எடுத்து, இன்று ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார். 

அதற்கு ரஜினியின் கடின உழைப்பு காரணம் என்றாலும், அவரை நெஞ்சில் சுமக்கும் ரசிகர்களின் வாழ்த்தும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஃப்ர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோவில் தியேட்டர் முன்னாடி குத்தாட்டம் போடுவதில் இருந்து, திரையில் சூப்பர் ஸ்டார் பெயரைப் பார்த்து விசில் அடித்து அசரடிப்பது வரை ரஜினி ரசிகர்கள் வேற லெவலில் அவரை கொண்டாடி வருகின்றனர். 

சூப்பர் ஸ்டார் பட ரிலீஸ் என்றாலே அவரது ரசிகர்கள் அதை திருவிழா போல கொண்டாடுகின்றனர். திரைத்துறையில் கிடைக்கும் பணம், புகழ் அனைத்தையும் விட ரசிகனின் கைத்தட்டலே சிறந்த சொத்து என்பது ஒவ்வொரு கலைஞனும் உணர்ந்த விஷயம். அதை நன்றாக புரிந்துள்ள ரஜினிகாந்த் விழா மேடையில் இருந்து அனைத்து இடங்களிலும் தனது ரசிகர்களுக்கு உரிய மரியாதை அளித்து வருகிறார். அதன்படி சமீபத்தில் தனது ரசிகன் ஒருவரின், நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்தி அசத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார். 

சூப்பர் ஸ்டார் கையால் வளையல் அணிவிக்க வேண்டும் என்பது ரசிகரின் மனைவி ஆசையாம். எனவே நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சூப்பர் ஸ்டாரை சந்தித்த அந்த ரசிகர், மனைவியின் ஆசை குறித்து தெரிவித்துள்ளார். 

உடனடியாக ஒரு தந்தையாக இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு வளையல் அணிவித்து மகிழ்வித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரசிகருக்காக ரஜினி செய்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. மேலும் ரஜினிகாந்த் அப்பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.